சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரசின் பிற தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர் - ஷோபா எம்.பி. பேட்டி
சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரசின் பிற தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக ஷோபா எம்.பி. கூறினார். கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுக்கு பிற தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. அவர் சர்வாதிகாரியை போல் நடந்து கொள்வதால், அவருக்கு எதிராக பிற தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார், பி.கே.ஹரிபிரசாத், எச்.கே.பட்டீல், பரமேஸ்வர், ராமலிங்கரெட்டி ஆகியோர் எங்கே இருக்கிறார்கள், யாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. சித்தராமையாவின் ஆணவ போக்கே இதற்கு காரணம்.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்தினால், சித்தராமையாவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட விழாது. இதை மூடிமறைக்க சித்தராமையா பா.ஜனதா கட்சியை விமர்சித்து பேசுகிறார். ஸ்ரீராமுலுவை குறியாக வைத்து சித்தராமையா விமர்சனம் செய்கிறார். வால்மீகி சமூகத்தை சேர்ந்த அவரை, ஒன்றும் தெரியாதவர் என்று விமர்சிப்பது சரியல்ல.
இடைத்தேர்தலில் பெரிய அதிசயம் நிகழ்ந்து காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், ஆட்சிக்கு வர முடியாது. எனக்கு இருக்கும் தகவல்படி ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறலாம். ஆனாலும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் வாக்குகள் சிதறிவிடும் என்று கருதுவதால், இடைத்தேர்தலில் பா.ஜனதா தோற்கும் என்று சித்தராமையா சொல்கிறார்.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக நல்ல நிலை காணப்படுகிறது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை. இது வாக்காளர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. அக்கட்சி எப்போதும் 3-வது இடத்தை தான் பிடிக்கும். நட்சத்திர ஓட்டலில் தங்கி பொழுதை கழித்த குமாரசாமியை அழைத்து காங்கிரஸ் முதல்-மந்திரி பதவியை வழங்கியது.
முதல்-மந்திரி பதவி பறிபோய்விட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ள குமாரசாமி, வாய்க்கு வந்தபடி பேசுகிறார். ஆட்சிக்கு வந்துவிட்டால், அவரது குடும்பத்திற்காக மட்டும் செயல்படுகிறார். எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை பெற்று முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். அவர்களை புறக்கணித்ததால், அதிருப்தி அடைந்து அந்த எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக செயல்பட்டு ராஜினாமா செய்தனர்.
ஆட்சி கவிழ்ந்தது தொடர்பாக சித்தராமையா மற்றும் குமாரசாமி ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொள்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு ஷோபா கூறினார்.
Related Tags :
Next Story