குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை


குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 25 Nov 2019 11:15 PM GMT (Updated: 25 Nov 2019 6:55 PM GMT)

குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவருக்கும், கர்நாடகா மாநிலம், மாலூரை சேர்ந்த ஸ்வேதா (25) என்பவருக்கும், கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஸ்ருதிலட்சுமி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் ஸ்வேதா குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு குழந்தைக்கு மருந்து வழங்குவது தொடர்பாக கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த ஸ்வேதா, குழந்தை ஸ்ருதிலட்சுமியை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ரெயிலில் பாய்ந்து தற்கொலை

இதையடுத்து முரளி தனது மனைவி மற்றும் குழந்தை குறித்து அக்கம் பக்கத்தினரிடமும், உறவினர் வீடுகளுக்கும் சென்று விசாரித்தார். ஆனால் ஸ்வேதா மற்றும் குழந்தை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓசூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ஸ்வேதா பிணமாக கிடந்தார். குழந்தை ஸ்ருதிலட்சுமி காயத்துடன் அருகில் அழுது கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓசூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வேதா தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் கிடந்ததால் அவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், குழந்தையை கொலை செய்ய மனம் இல்லாமல் அதை தூக்கி வீசி விட்டு தான் மட்டும் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், குழந்தை தூக்கி வீசப்பட்டதில் ஜல்லிக்கற்கள் மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்றும் ஓசூர் ரெயில்வே போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story