அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடிய வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடிய வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடி, ஆவணங்களை தீவைத்து எரித்த வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் தீவுத்தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளிக்கூடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்துக்கான வாடகையை காயல்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த பாரூக் என்ற முகமது பாரூக் (வயது 67) திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பெற்று வந்தார். இந்த நிலையில் அந்த வாடகை பணம் மற்றொருவருக்கு மாற்றி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமது பாரூக், கடந்த 9-6-2013 அன்று மாலையில் பேயன்விளையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (29), கீழலட்சுமிபுரத்தை சேர்ந்த மலைமேகம் (47), ஸ்ரீதர் என்ற ஸ்ரீதரன் (38), காயல்பட்டினம் தேங்காய் பண்டகசாலையை சேர்ந்த அந்தோணிராஜ் (29) ஆகியோருடன் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அங்கு வகுப்பறையில் இருந்த பொருட்களை சூறையாடி, பல்வேறு ஆவணங்களை தீவைத்து எரித்தனர். இதில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஏசுவடியாள் பொன்னம்மா ஆறுமுகநேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்த கொண்டிருந்தபோது, முகமது பாரூக் இறந்து விட்டார். இதனால் மற்ற 4 பேர் மீதான விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம், மலைமேகம், அந்தோணிராஜ், ஸ்ரீதரன் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.13 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக கோமதி மணிகண்டன் ஆஜரானார்.

Next Story