அரியலூரில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆசிரியர் உள்பட 2 பேர் கைது


அரியலூரில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2019 11:15 PM GMT (Updated: 25 Nov 2019 7:37 PM GMT)

அரியலூரில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 23). இவர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த 2 பேர், சிக்கன் பக்கோடா சாப்பிட்டு விட்டு, ரூ.500 நோட்டை கொடுத்தனர்.

அந்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தபோது, ராஜாவிற்கு அது கள்ளநோட்டாக இருக்குமோ? என சந்தேகம் ஏற்பட்டது. அவர் உடனே இதுகுறித்து அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபர்கள் கொடுத்த ரூபாய் நோட்டை ஆய்வு செய்தனர். அப்போது அது கள்ளநோட்டு என்பது உறுதியானது.

2 பேர் சிறையில் அடைப்பு

இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவை சேர்ந்த ராஜே‌‌ஷ் (27), கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள வெண்கரும்பூர் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் (41) என்பது தெரியவந்தது. ராஜாங்கம் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் நண்பர்களான இவர்கள் 2 பேரும் இதேபோல் அரியலூர் மாவட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 16-ஐ பறிமுதல் செய்தனர். கயர்லாபாத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜவேல் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். இதனால் அரியலூர் மாவட்ட பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story