திருச்சி ஜங்சன் ரெயில் நிலைய கூடுதல் நுழைவு வாயிலின் வழியாக பஸ்கள் இயக்கம்


திருச்சி ஜங்சன் ரெயில் நிலைய கூடுதல் நுழைவு வாயிலின் வழியாக பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:30 AM IST (Updated: 26 Nov 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தின் கூடுதல் நுழைவு வாயில் வழியாக பஸ்கள் சென்று வரத்தொடங்கின.

திருச்சி,

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் 24 மணி நேரமும் எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருவதும், போவதுமாக தினமும் இருப்பது வழக்கம். ேமலும் திருச்சி ரெயில்வே கோட்டமும் அதன் வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

எனவே, திருச்சி ரெயில் நிலையத்தை புதுப்பொலிவு பெறும் வகையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கின. ரெயில் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால்(போர்ட்டர்கள்) சேர்ந்து உருவாக்கிய ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் 40 ஆண்டுக்கும் மேலாக ரெயில் நிலைய வளாகத்தில் வழிபாட்டுக்காக செயல்பட்டு வந்தது. அக்கோவிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கிருந்த மூலவர் அம்மன் சிலை, விநாயகர் சிலை, நாகம்மாள் உள்ளிட்ட 13 சிலைகள் அகற்றப்பட்டு அவை வருவாய்த்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் அலங்கார வளைவு அமைக்கும் பணி, நடைபாதை மேற்கூரை வாயில் வரை நீட்டிக்கும் பணி, ரெயில் நிலையத்தின் வலதுபுறம் கூடுதல் நுழைவு பாதை சீரமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் சென்று வர வசதி மற்றும் புதிய ரவுண்டானா, ரெயில் நிலைய வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் கார்கள் நிறுத்த வசதி உள்ளிட்ட பணிகள் நடந்தன.

மேலும் ரெயில் நிலையத்தின் முன்பதிவு மையமும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு அவை பயன்பாட்டுக்கும் வந்து விட்டன

ஜங்சன் ரெயில் நிலையத்தின் கூடுதல் நுழைவு வாயில் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு, புதிய ரவுண்டானா மற்றும் 3 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்தும், சாலையில் நடுவே செடிகள் வைத்தும் அழகுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் கூடுதல் நுழைவு வாயில் வழியாக ஜங்சன் ரெயில் நிலையம் வரை பஸ்கள் சென்று வரத்தொடங்கின.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையம் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த கூடுதல் நுழைவு வாயில் வழியாக சென்று திரும்பி சென்றன. இந்த வழித்தட வசதியை, திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை போலீஸ் கமி‌‌ஷனர் வேதரத்தினம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் உதவி கமி‌‌ஷனர் அருணாசலம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கூடுதல் நுழைவு வாயில் வழியாக பஸ்கள் ரெயில் நிலையம் உள்ளே செல்லும் வகையில் பாரதியார் சாலையில் ரெயில்வே அருங்காட்சியகம் அருகில் போலீசார் இரும்பு தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அவ்வழியாக வரும் பஸ்களின் டிரைவர்களிடம், இனி எப்போதும் கூடுதல் நுழைவு வாயில் வழியாக ரெயில் நிலையம் வரை பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி, ஏற்றி வரவேண்டும் என அறிவுரை கூறினர். மேலும் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, இனி டவுன் பஸ்கள் நிற்காது என்றும், ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் கூடுதல் நுழைவு வாயில் வழியாக ரெயில் நிலையம் அருகிலேயே இறங்கி கொள்ளலாம் என்றும், காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை போக்குவரத்து போலீசாரும் அங்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story