பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை
தூத்துக்குடியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் ஒரு மாணவன் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மகள் மரிய ஐஸ்வர்யா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 23-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரிய ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மரிய ஐஸ்வர்யா சமீபத்தில் 2 நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர், சக மாணவர்கள் முன்னிலையில் மரிய ஐஸ்வர்யாவுக்கு 150 தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்து உள்ளார். இதனால் மனம் உளைச்சலில் மரிய ஐஸ்வர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்பேரில் தாளமுத்துநகர் போலீசார், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வெள்ளப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ஞானப்பிரகாசம் (32), தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கனகரத்தினம் (45) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியை கனகரத்தினத்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஞானப்பிரகாசத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு பிளஸ்-1 மாணவர் தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை ஆசிரியர் ஞானப்பிரகாசம், தலைமை ஆசிரியை கனகரத்தினம் ஆகியோர் தாக்கி துன்புறுத்தியதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 75(1) பிரிவின் கீழ் ஞானப்பிரகாசம், கனகரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் நேற்று வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆசிரியர்களிடம், மாணவி மரிய ஐஸ்வர்யா தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திச் சென்றனர். அதன் பின்னர் பள்ளிக்கூடத்திற்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story