சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: மண்எண்ணெய் கேன், வி‌‌ஷ பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: மண்எண்ணெய் கேன், வி‌‌ஷ பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 4:15 AM IST (Updated: 26 Nov 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க மண்எண்ணெய் கேன் மற்றும் வி‌‌ஷ பாட்டிலுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சேலம் 4 ரோடு பகுதியை சேர்ந்த குணவதி (வயது 59) என்பவர் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் குணவதியின் பையை சோதனை செய்தனர். இதில் மண்எண்ணெய் கேன் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து குணவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனக்கு திருமணம் நடந்து சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டேன். பின்னர் நான் 4 ரோட்டில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். சமீபத்தில் எனது பெற்றோர் இறந்து விட்டனர். எனது குடும்பத்தினர் தற்போது வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நான் என்ன செய்வது என தெரியாமல் தீக்குளிக்க வந்ததாக கூறினார்.

பரபரப்பு

இதேபோல் வாழப்பாடி அருகே உள்ள பள்ளத்தாதனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜூ என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு பூச்சி மருந்தை (வி‌‌ஷம்) பாட்டிலில் வைத்துக்கொண்டு வந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரிடம் இருந்த பாட்டிலை பிடுங்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான நிலத்தில் தென்னங்கன்றுகளை நட்டு உள்ளேன். இந்தநிலையில் பக்கத்து நிலத்துக்காரர் ஒருவர் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் எனக்கு தொல்லை கொடுக்கிறார். இதுமட்டுமல்லாமல் தென்னங் கன்றுகளை பிடுங்க சொல்லி பிரச்சினை செய்து வருகிறார். மேலும் அவர் எனது சாதி பெயரை சொல்லி திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இந்த 2 நபர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story