துண்டான சிறுவனின் கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்தனர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை


துண்டான சிறுவனின் கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்தனர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 26 Nov 2019 4:15 AM IST (Updated: 26 Nov 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஏர் கம்ப்ரசரின் சிலிண்டர் வெடித்து சிதறியதால் துண்டான சிறுவனின் கையை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

சேலம்,

சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 37). இவர் அப்பகுதியில் பெயிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி ஈரோட்டை சேர்ந்த தன்ராஜ் என்பவர் தனது லாரிக்கு பஞ்சர் ஒட்டுவதற்கு அந்த பட்டறைக்கு வந்தார். அங்கு லாரியின் டயருக்கு பட்டறையில் வேலை பார்க்கும் வி‌‌ஷ்ணுகுமார், மூர்த்தி ஆகியோர் பஞ்சர் ஒட்டினர். பின்னர் டயருக்கு ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் மூலம் ஏர் பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஏர் கம்ப்ரசர் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வி‌‌ஷ்ணுகுமார், மூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் ஏர் டேங்கின் மூடி 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, அங்கிருந்த ராமன் என்பவரது ஓட்டு வீட்டுக்குள் விழுந்தது.

அப்போது, வீட்டுக்குள் ராமனின் மகன்களான 5-ம் வகுப்பு படித்து வரும் மவுலீஸ்வரன் (11), ஒன்றாம் வகுப்பு படித்து வரும் லித்திக் (6) ஆகியோர் மீது விழுந்தது. இதில் சிறுவன் மவுலீஸ்வரனின் வலது மணிக்கட்டு துண்டானது. மேலும் அவனது தொடை எலும்பிலும் முறிவு ஏற்பட்டது.

அறுவை சிகிச்சை

இந்த விபத்து நடந்த ½ மணி நேரத்திற்குள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவன் அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். இதைத்தொடர்ந்து எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டு அதன்பிறகு மவுலீஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதாவது, சுமார் 6 மணி நேரம் வரை சிறுவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி பேராசிரியர் டாக்டர் எம்.கே.ராஜேந்திரன் தலைமையில் இணை பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியர்கள் தன்ராஜ், கோபாலன், தேன்மொழி, சேதுராஜா, மகே‌‌ஷ்குமார், மயக்கவியல் துறை நிபுணர்கள் மற்றும் இதர மருத்துவ குழுவினர் சிறுவனின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து சாதனை படைத்தனர். குறிப்பாக எந்த பாதிப்பும் இல்லாமல் கை முற்றிலும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மவுலீஸ்வரனை நேற்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் மற்றும் டாக்டர்கள் குழுவினர் பார்த்து உடல்நலம் விசாரித்தனர். மேலும், அவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story