கருங்கல்பாளையம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கருங்கல்பாளையம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 26 Nov 2019 4:15 AM IST (Updated: 26 Nov 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல்பாளையம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதேபோல் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் அருந்ததியர் தெருவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோம். பல ஆண்டுகளாக வீடுகட்டி குடியேற வீட்டுமனை இல்லாமல் தவித்து வருகிறோம். சொந்தமாக விவசாய நிலமோ, குடியிருக்க வீடோ இல்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் கருணை காட்டி கருங்கல்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள தரிசு நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நடவடிக்கை

கருங்கல்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும் என்றனர்.

ஆனால் இதுவரை பட்டா வழங்குவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களின் நலன் கருதி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொலை மிரட்டல்

ஓமலூர் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் மனு கொடுத்தார். அதில், என்னுடைய விவசாய நிலத்தில் தற்போது கரும்பு அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் நிலம் அருகே உள்ள வழித்தடத்தை மறித்து கற்களை கொட்டி சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.

இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story