செய்யாறு அருகே முன்னாள் மாணவர்கள் வழங்கிய வசதிகளை முடக்கிய அரசு பள்ளி - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


செய்யாறு அருகே முன்னாள் மாணவர்கள் வழங்கிய வசதிகளை முடக்கிய அரசு பள்ளி - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:32 AM IST (Updated: 26 Nov 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே முன்னாள் மாணவர்கள் இணைந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பல்வேறு வசதிகளை செய்த நிலையில் அதனை தலைமையாசிரியை பயன்படுத்தவில்லை எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு,

செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமைஆசிரியையாக சாந்தி பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த இந்த பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக உயர்த்தும் நோக்கில் ரூ.14 லட்சம் வரை நன்கொடை திரட்டி அடிப்படை வசதிகள், விளையாட்டு திடலில் உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், இருக்கை வசதி அனைத்தையும் ஏற்படுத்தினர். மேலும் புதிதாக 3 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்க பெண் உதவியாளர் என நியமித்து அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் ஊதியம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினருக்கு செயல்பாடுகளுக்கு தடையாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் பயன்படுத்தாமல் பூட்டியே கிடப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) எம்.எஸ்.சுகானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி துறை ரீதியாக விசாரணை நடத்தி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story