துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அஜித்பவார் மீதான ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் வழக்குகள் ரத்து?
மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு எதிரான ரூ.70 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல் வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளித்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது நீர்ப்பாசன துறையில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை மந்திரியாக பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார்.
தற்போது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, பாரதீய ஜனதா அரசு அமைய ஆதரவளித்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
பதவியேற்று 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் மராட்டிய லஞ்ச ஒழிப்பு துறை, 2013-ம் ஆண்டு நடந்த நீர்ப்பாசன திட்டங்களில் ஊழல் நடந்ததாக கூறப்படும் 9 வழக்குகளை விசாரணையில் இருந்து முடித்து வைப்பதாக நேற்று அறிவித்தது.
மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு உதவியதற்கு பிரதிபலனாக அஜித் பவார் மீதான இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பாரதீய ஜனதா அரசு பதவியேற்ற நாளில் இருந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு செய்த ஒரே நல்ல காரியம் ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளை கைவிட்டது தான் என்றும் காங்கிரஸ் கிண்டலடித்தது.
இதையடுத்து மராட்டிய மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.ஜி.பி. பரம்வீர் சிங் கூறுகையில், “நீர்ப்பாசன ஊழலில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகள் அஜித்பவாருடன் தொடர்புடையது அல்ல. ஆனால் நீர்ப்பாசன துறை ஊழலில் 9 வழக்குகள் நிபந்தனை அடிப்படையில் விசாரணையை கைவிட்டு உள்ளோம். கோர்ட்டு அல்லது அரசு உத்தரவிட்டால் மீண்டும் அந்த வழக்குகள் விசாரிக்கப்படும். நாங்கள் நீர்ப்பாசன ஊழல் புகார் தொடர்பாக புகார் எழுந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான டெண்டர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story