'எனது வாழ்க்கையில் பொய் என்றால் என்னவென்றே தெரியாது' இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடியூரப்பா பேச்சு


எனது வாழ்க்கையில் பொய் என்றால் என்னவென்றே தெரியாது இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 26 Nov 2019 5:48 AM IST (Updated: 26 Nov 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

எனது வாழ்க்கையில் பொய் என்றால் என்னவென்றே தெரியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பல்லாரி, 

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு கமலாபுரைன் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

நாம் காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்றால், அது முதலில் கர்நாடகத்தில் இருந்து தொடங்க வேண்டும். எனது வாழ்க்கையில் பொய் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் கூறினேன். எனது இந்த கருத்தை மக்கள் நம்பவில்லை. ஆனால் அந்த தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் அந்த கட்சிகள் மிகவும் கஷ்டப்பட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு கூட போதுமான எம்.பி.க்களின் ஆதரவு காங்கிரசுக்கு இல்லை.

இது தான் அக்கட்சியின் இன்றைய நிலை. 17 எம்.எல்.ஏ.க்களில், முதலில் ராஜினாமா செய்தவர் ஆனந்த்சிங். கூட்டணி ஆட்சி காலத்தில் தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால் அதிருப்தி அடைந்து பதவியை ராஜினாமா செய்தார். அவர் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரை வெற்றி பெற செய்யுங்கள். அவர் மந்திரியாக பதவி ஏற்று, இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story