திருமங்கலம் அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருமங்கலம் அருகே தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரது மகள் முத்துமாரி(வயது28). ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன இவருக்கும் அதேபகுதியில் உள்ள அரசபட்டி கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவருக்கும் 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
எலக்ட்ரீசியனான பெரியகருப்பன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். தற்போது திருப்பூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். முத்துமாரி அரசபட்டியில் வசித்து வந்தார்.
நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துமாரி மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள கண்மாயில் மலையான்கோவில் பகுதியில் அவர் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கண்மாயில் குளிக்கச்சென்றவர்கள் இதனைப்பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கூடக்கோவில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் அங்கு சென்று பார்வையிட்டார். தலையில் கல்லைப்போட்டு முத்துமாரி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
முத்துமாரியின் உடல் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கொலையில் துப்பு துலக்க மதுரையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story