மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கோர்ட்டில் சாட்சியம்


மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கோர்ட்டில் சாட்சியம்
x
தினத்தந்தி 27 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர், கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி வனப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து, ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதை அறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார். ஆனால், 7 பேர் தப்பிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜமுனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் மாவோயிஸ்டுகளான கண்ணன், காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர்.

இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், ஏட்டு ஆனந்த், அடுக்கம் அருகேயுள்ள தாமரைக்குளம் மலைக்கிராமத்தை சேர்ந்த விசுவநாதன், அவருடைய மனைவி லீமா, உறவினர் தங்கராஜ் ஆகிய 5 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இதில் விசுவநாதன், தங்கராஜ் ஆகியோரை, மாவோயிஸ்டுகள் தங்களுடைய இயக்கத்தில் சேர்க்க மூளைச்சலவை செய்ததாக கூறி சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதுதொடர்பாக எதிர்தரப்பு வக்கீல் கண்ணப்பன் குறுக்கு விசாரணை செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார்.

Next Story