கோயம்பேடு மார்க்கெட்டில்: ரசாயனம் பூசிய வாழைப்பழங்கள், பச்சை பட்டாணி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி


கோயம்பேடு மார்க்கெட்டில்: ரசாயனம் பூசிய வாழைப்பழங்கள், பச்சை பட்டாணி பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 26 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-26T23:12:26+05:30)

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பூசப்பட்ட வாழைப்பழங்கள், பச்சை பட்டாணிகள், பீன்ஸ் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

இயற்கைக்கு மாறாக செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடல்நலத்துக்கு நல்லதல்ல. அதேபோல காய்கறியில் நிறமூட்டிகள் சேர்ப்பதும் தவறு. அது உணவு பாதுகாப்பு சட்டப்படி குற்ற செயலாகவும் கருதப்படுகிறது. இப்படி ரசாயனம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்கள் வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை (சென்னை) நியமன அதிகாரி ஏ.ராமகிருஷ்ணன் தலைமையில் ஏ.சதாசிவம், சண்முகசுந்தரம், அழகுபாண்டி, சுந்தரமூர்த்தி உள்பட அதிகாரிகள் குழு, கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று அதிகாலை அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் சில கடைகளில் எத்திலின் ரசாயனம்(ஸ்பிரே) தூவப்பட்டு செயற்கை முறையில் வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதேபோல காய்ந்த பட்டாணிகளை ஊறவைத்து அதில் பச்சை நிறத்தை சேர்த்து பச்சை பட்டாணியாக விற்பனை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பச்சை பட்டாணிகளை வாளியில் உள்ள தண்ணீரில் போட்டவுடன் அந்த தண்ணீர் பச்சை நிறமாக மாறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து 250 கிலோ பச்சை பட்டாணிகள் மற்றும் நிறமூட்டப்பட்ட டபுள் பீன்ஸ் (10 கிலோ அளவில்) கைப்பற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள், பச்சை பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்டவை மின்சாரம் தயாரிக்கும் கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், ரசாயன பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. செயற்கை முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைத்த கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மார்க்கெட் நிர்வாக குழுவுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட் குறித்து மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே தொடர் ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம்” என்றனர்.

Next Story