பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பெண்ணை தாக்கி நகை பறிப்பு - கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கி நகையை பறித்து சென்ற கேரளாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பொம்மிடி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பழைய சாளூரை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி பிரபாவதி (வயது40). இவர் நேற்று காலை தனது மொபட்டில் கோட்டையூருக்கு பால் கொண்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிய போது பெரிய ஏரி என்ற இடத்தில் ஹெல்மெட் அணிந்து 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் திடீரென பிரபாவதியின் மொபட்டை வழிமறித்து அவர் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நகை பறிக்கும் முயற்சியை தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், பிரபாவதியை தாக்கி விட்டு கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கோம்பூரில் உள்ள சோதனைச்சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் மொபட்டில் வந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த சபீர் (32), நிசார் (33) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேலத்தில் தங்கி, இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து சேலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார், ஏ.பள்ளிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரபாவதியிடம் பறித்து சென்ற 4½ பவுன் நகை, மொபட்டை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story