பூண்டி ஏரிக்கு மேலும் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு - அதிகாரிகள் தகவல்


பூண்டி ஏரிக்கு மேலும் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2019 3:45 AM IST (Updated: 27 Nov 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட உள்ளதையடுத்து பூண்டி ஏரிக்கு மேலும் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை,

1983-ம் ஆண்டு செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்்க வேண்டும். ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

கோடை வெயில் காரணமாக கண்டலேறு அணை வறண்டதால் ஜூலை மாதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் சோமசீலா அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டனர். கண்டலேறு அணையில் நீர் மட்டம் அதிகரித்ததால் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீீர் திறந்து விட்டனர். இந்த தண்ணீீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

கடந்த மாதம் 6-ந்தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், பின்னர் 11-ந்தேதி புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடிக்காக கிருஷ்ணா நதிநீரை எடுத்து வருகின்றனர். இதனால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆந்திர பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் அடுத்த மாதம் 15-ந் தேதி நிறுத்தப்பட உள்ளதாகவும் அதனால் பூண்டி ஏரிக்கு மேலும் 2 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் மாதம் 28-ந்தேதி முதல் நேற்று வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி எரிக்கு 2.400 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.00 அடியாக பதிவானது. 989 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 767 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

Next Story