கஞ்சா விற்ற சட்டக்கல்லூரி மாணவர் கைது - மேலும் 5 பேர் சிக்கினர்


கஞ்சா விற்ற சட்டக்கல்லூரி மாணவர் கைது - மேலும் 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Nov 2019 3:45 AM IST (Updated: 27 Nov 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி போலீசார் கஞ்சா விற்கும் நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி அரசு கல்லூரி அருகில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா விற்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

விசாரணையில் கஞ்சா விற்றவர் பொன்னேரி பேரூராட்சி தேவமாநகரை சேர்ந்த வசந்த் (வயது 26) என்பதும், அவர் தனியார் சட்டக்கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரசாபுரம் பகுதியில் வடமாநில வாலிபர்கள் இருவர் கஞ்சா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கஞ்சா விற்றது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேஷ் (35), இருங்காட்டுகோட்டை பகுதியில் வசிக்கும் ஒடிசாவை சேர்ந்த நிக்கோலான் (26) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் கட்டுமான வேலை செய்து வந்தனர். இவர்கள் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விற்பனை செய்வது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

திருவள்ளூரில் கஞ்சா விற்கப்படுவதாக திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

விசாரணையில் அவர்கள் பெரியகுப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், முரளி (38), கடம்பத்தூரை சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரிய வந்தது.

Next Story