தஞ்சையில் பயங்கரம்: அரசு பெண் ஊழியர்-கள்ளக்காதலன் வெட்டிக்கொலை
தஞ்சையில் வீடு புகுந்து அரசு பெண் ஊழியர், அவரது கள்ளக்காதலனை வெட்டிக்கொலை செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணின் குழந்தைகள் கண் முன்பே தீர்த்துக்கட்டிய இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சாவூர்,
தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள ‘இ’ பிளாக்கில் முதல் தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் வனிதா (வயது 42). இவர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காமராஜ். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
காமராஜ் அரசு அலுவலகத்தில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். அவர் இறந்ததையடுத்து கருணை அடிப்படையில் வனிதாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
வனிதாவுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வனிதாவுக்கும், தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த திருவேதிக்குடியை சேர்ந்த கனகராஜ்(35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
கனகராஜூக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருவையாறு அருகே உள்ள திருவேதிக்குடியில் வசித்து வருகிறார்கள். இருப்பினும் கனகராஜ், திருமணம் செய்யாமலே வனிதாவுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர் சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டி வருகிறார்.
வனிதா தனது சித்தி மகன் பிரகாஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக வாங்கி இருந்தார். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பிக்கொடுத்துள்ளார்.
மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து பிரகாஷ் பலமுறை பணத்தை திருப்பித்தருமாறு கேட்டும் வனிதா கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் பணத்தை வாங்கித்தருமாறு தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், தனது நண்பர் சூர்யா மற்றும் மகேஸ்வரி ஆகியோருடன் நேற்று காலை 7.30 மணிக்கு வனிதா வீட்டிற்கு சென்று கதவை தட்டினர்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சமைத்துக்கொண்டு இருந்த வனிதா கதவை திறந்தார். அப்போது கதவை தள்ளிக்கொண்டு பிரகாஷ் உள்பட 3 பேரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது வனிதாவிடம் பணத்தை கேட்டு பிரகாஷ் திட்டியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் படுத்து இருந்த குழந்தைகள் மற்றும் படுக்கையறையில் படுத்து இருந்த கனகராஜூம் எழுந்து வந்தனர். பணப்பிரச்சினை தொடர்பாக பிரகாஷ்-வனிதா இடையே வாய்த்தகராறு கடுமையாக முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் உள்பட 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வனிதாவை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். அதை பார்த்த கனகராஜ் தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் வெட்டிக்கொன்றனர். வனிதாவின் 3 குழந்தைகளின் கண்எதிரில் சில நிமிடங்களில் இந்த கொலை சம்பவம் நடந்து முடிந்தது. பின்னர் பிரகாஷ் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
நடந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன குழந்தைகள் மூவரும் கதறினர் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து பிரகாஷ் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. வனிதாவின் உடலை பார்த்து அவருடைய குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story