தஞ்சை அருகே, இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி - லாக்கரை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான நகை-பணம் தப்பின
தஞ்சை அருகே இந்தியன் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான நகை-பணம் தப்பின.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டையில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் திருவையாறு, நடுக்கடை, கண்டியூர், அம்மன்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்த உடன் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த வங்கியில் காவலாளிகள் யாரும் பணியில் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம மனிதர்கள் இந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து நள்ளிரவில் வங்கிக்கு வந்து ஜன்னலை கியாஸ் வெல்டிங் கருவி மூலம் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமராக்களுக்கு செல்லும் வயர்களை துண்டித்து வங்கியில் இருந்த லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை.
இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்ட மர்ம நபர்கள், தாங்கள் வந்து சென்ற தடயம் ஏதும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை வங்கி முழுவதும் தூவி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று காலை வங்கி காசாளர் ரவி மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு வந்தனர். அப்போது வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு எச்சரிக்கை மணி மற்றும் கண்காணிப்பு கேமராவின் வயர்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வங்கி மேலாளர் வசந்தகுமார் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் மற்றும் நடுக்காவேரி போலீசார் வங்கிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் ‘டபி’ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் வங்கியில் இருந்து அருகே உள்ள ஒரு தெரு வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று திரும்பியது. கைரேகை நிபுணர்கள் வங்கிக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். ஆனால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
லாக்கரை மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
தஞ்சை-திருவையாறு மெயின்ரோட்டில் உள்ள இந்தியன் வங்கியில் மர்ம மனிதர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story