திருமங்கலம் அருகே, 5 பவுன் நகைக்காக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம் - பக்கத்து வீட்டுக்காரர் கைது
திருமங்கலம் அருகே 5 பவுன் நகைக்காக பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
மதுரை திருமங்கலம் அருகே உள்ள அன்னகாமு தோட்டத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் என்ற துரைச்சாமி. இவரது மனைவி காவேரி அம்மாள் (வயது 55). இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் உண்டு. துரைச்சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் காதர்ஷா ஒலி (38) என்பவர் காவேரி அம்மாளுக்கு காய்கறி வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட சிறு, சிறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு 9 மணி அளவில் காதர்ஷா, காவேரி அம்மாளுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென காவேரி அம்மாளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை காதர்ஷா பறிக்க முயன்றுள்ளார். உடனே அவர் சத்தம் போட்டார்.
இதனால் பயந்து போன காதர்ஷா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து காவேரி அம்மாளின் கழுத்தில் அறுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த காவேரிஅம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே காவேரி அம்மாளின் கழுத்தை அறுத்த காதர்ஷா, நேராக எதிரே உள்ள தனது வீட்டின் மாடிக்கு சென்று கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சு கொடுத்து நைசாக அவரை மடக்கி கைது செய்தனர்.
காதர்ஷாவுக்்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மனைவியும் மகள்களும் வெளியே சென்றிருந்த நேரத்தில்தான் அவர் காவேரி அம்மாளை கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
5 பவுன் நகைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story