பரமக்குடியில், கொலையில் தேடப்பட்டவரை பஜாரில் விரட்டி பிடித்த போலீஸ்காரர் - அதிகாரிகள் பாராட்டு


பரமக்குடியில், கொலையில் தேடப்பட்டவரை பஜாரில் விரட்டி பிடித்த போலீஸ்காரர் - அதிகாரிகள் பாராட்டு
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 27 Nov 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தேடப்பட்டவரை பஜாரில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்த போலீஸ்காரரை போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன்நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது 52). கணவருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி இரவு ஒரு கும்பல் உதவியுடன் கணவர் முனியாண்டியை (65) கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியம்மாள் (52), பரமக்குடி கோவிந்தபுரத்தை சேர்ந்த பாண்டி (26), சிங்காரத்தோப்பை சேர்ந்த கார்த்திக் (24) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் பாலன்நகரை சேர்ந்த முருகன் மகன் சேக் என்ற ஜெயக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஆனந்தகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஜெயக்குமார் செல்வதை கவனித்தார்.

உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜெயக்குமாரை விரட்டி சென்றார். உழவர் சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையில் இறங்கி ஜெயக்குமார் பொருட்கள் வாங்கியுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆனந்தகுமார் தனி ஆளாக ஜெயக்குமாரை மடக்கி பிடிக்க பாய்ந்தார். இதைபார்த்த ஜெயக்குமார் கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடினார். பஜாரில் அவரை விடாமல் துரத்தி, சண்டையிட்டு தனி நபராக மடக்கி பிடித்தார். பின்பு இதுபற்றி நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித் தார்.

அதைதொடர்ந்து அங்கு விரைந்து வந்த நகர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியம் மற்றும் போலீசார், ஜெயக்குமாரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர் இரவல் வாங்கி வந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். இவர் மீது கொலை வழக்கு உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் தொடர்புடையவரை தனி நபராக விரட்டி சென்று பிடித்த போலீஸ்காரர் ஆனந்தகுமாரை, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பரமக்குடி துணை சூப்பிரண்டு சங்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பாராட்டினர்.

Next Story