மஞ்சூர் பகுதியில் தொடர் மழை எதிரொலி: போர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி
மஞ்சூர் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக போர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின்சார உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்நிலைங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் பருவ மழை தொடங்கியது. இதையொட்டி 3 மாதங்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை கொட்டியது.
இந்த மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பியது. மேலும், மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியது.
இதைத்தொடர்ந்து அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் மஞ்சூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் 175 கன அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணைக்கு உட்பட்ட போர்த்தி அணை அதன் எல்லைப் பகுதியான போர்த்தி ஆடா வரை தண்ணீர் நிரம்பி முழுகொள்ளளவை எட்டியது.
தற்போது போர்த்தி அணை எழில்மிகு காட்சியுடன் கடல் போல் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் போர்த்தி அணையில் அழகை கண்டு ரசிக்கிறார்கள். மேலும், அணையை செல்போன்களில் படம் பிடித்து செல்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி காணப்படுவதால் கோடைக்காலங்களில் மின் உற்பத்திக்கு சாதகமாக விளங்கும் என்று பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story