இடைக்கால சபாநாயகர் நியமனம்: சட்டசபை இன்று கூடுகிறது


இடைக்கால சபாநாயகர் நியமனம்: சட்டசபை இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 27 Nov 2019 5:15 AM IST (Updated: 27 Nov 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கோலம்கருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து இன்று மராட்டிய சட்டசபை கூடுகிறது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர்.

மும்பை, 

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, ஆட்சி அமையாமல் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக புதிய சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட 288 எம்.எல். ஏ.க்களும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பதவி ஏற்காமல் உள்ளனர். இந்த நிலையில், அதிரடியாக பதவியில் அமர்ந்த பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அப்போது, பாரதீய ஜனதா தலைமையிலான அரசு இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அதற்கு முன் இடைக்கால சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏ.க்களை பதவி ஏற்க செய்ய வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான அஜித்பவார் திடீரென துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார். அரசு கவிழ்ந்ததால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று பாரதீய ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கரை மராட்டிய சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நியமித்தார். நேற்று கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவர், இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவர் சட்டசபை தேர்தலில் 8 தடவை வெற்றி பெற்றவர். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த காளிதாஸ் கோலம்கர், நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, அந்த கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இடைக்கால சபாநாயகர் பதவி ஏற்பை தொடர்ந்து, இன்று(புதன்கிழமை) சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இடைக்கால சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Next Story