விழுப்புரத்தில் ரூ.70½ கோடி மதிப்பில் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் ; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.70½ கோடி மதிப்பில் கட்டப்பட்ட விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.70 கோடியே 59 லட்சம் மதிப்பில் அரசு சட்டக்கல்லூரியும், விழுப்புரம் சாலாமேட்டில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் புதியதாக கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா மற்றும் விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று மதியம் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சட்டத்துறை அரசு செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அரசு சட்டக்கல்லூரி, மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், நகராட்சி நூற்றாண்டு விழா திட்டப்பணிகளான விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள குளத்தை ரூ.1½ கோடி மதிப்பில் தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி பாதையுடன் பூங்கா அமைக்கும் பணிக்கும், ரூ.4½ கோடி மதிப்பில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.279 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 594 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாவட்டத்தில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட ரூ.92 கோடியே 6 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான 29 புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, அனைத்து துறைகளின் சார்பில் 1,636 பேருக்கு ரூ.17 கோடியே 22 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களாட்சியை தாங்கி பிடிக்கும் 4 தூண்களில் நீதித்துறையும் ஒன்று. சட்டக்கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த சட்ட வல்லுனர்களாகவும், நீதிபதியாகவும் உச்ச நிலையை அடைகின்றனர். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்தான் ஆசியாவிலேயே மிகக் குறைவான கட்டணத்தில் தரமான சட்டக்கல்வியை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 7 சட்டக்கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு 7 ஆக இருந்த சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 14 அரசு சட்டக்கல்லூரிகளும், ஒரு தேசிய சட்ட பல்கலைக்கழகமும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகமும் செயல்பட்டு வருகின்றன. 14 அரசு சட்டக்கல்லூரிகளிலும் இளநிலை சட்டப் படிப்பை 11,206 மாணவர்களும், முதுநிலை சட்டப்படிப்பை 420 பேரும் ஆக மொத்தம் 11,626 மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 85 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 3 மாவட்ட மாணவர்களுக்கு அரசு சட்டக்கல்லூரி ஏதும் இல்லை என்ற காரணத்தினாலும், சட்டம் பயில விரும்பும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் பேரிலும் அந்த மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்றும் விழுப்புரம் நகரில் 2017-18-ம் ஆண்டில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
அந்த கல்லூரிக்கு விழுப்புரம் சாலாமேட்டில் நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் தற்போது 3 ஆண்டு சட்டப்படிப்பை 240 மாணவர்களும், 5 ஆண்டு சட்டப்படிப்பை 240 மாணவர்களும், முதுநிலை சட்ட மேற்படிப்பை 20 மாணவர்களும் என மொத்தம் 500 பேர் சட்டம் பயின்று வருகின்றனர்.
அதுபோல் உயர்கல்விக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் அ.தி.மு.க. அரசு மிகுந்த கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.4 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி ரூ. 7 கோடியே 98 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு இன்று (அதாவது நேற்று) முதல் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளர்ந்து வரும் நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சி 1.10.1919 அன்று 3-ம் நிலை பேரூராட்சியாக தொடங்கப்பட்டு 2.3.1988 அன்று தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 30.9.2019 நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நூற்றாண்டு விழா காணும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார், மாநில சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர், விழுப்புரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ரமா, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story