பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த ஆந்திரா கும்பல் கைது ரூ.3 லட்சம், செல்போன்கள் பறிமுதல்


பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்த ஆந்திரா கும்பல் கைது ரூ.3 லட்சம், செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Nov 2019 3:30 AM IST (Updated: 27 Nov 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆந்திராவை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வையம்பட்டி,

மணப்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பல் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ.49 ஆயிரம் கொள்ளை போனது. இதேபோல் துவரங்குறிச்சியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து மொபட்டில் சென்று கொண்டிருந்தவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மணப்பாறை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் வகையில் 2 மொபட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், ஆந்திராவை சேர்ந்த பாபு (வயது 45), மோகன் (27), ரமணா (31), சரவணா (30) என்பதும், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சியில் நடைபெற்ற கொள்ளையில் 4 பேருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள், 2 மொபட்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வயதானவர்கள் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும்போது அவர்களை நோட்டமிடும் மர்ம நபர்கள் தான் இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். ஆகவே கொள்ளை சம்பவங்களை தடுத்திட வங்கிக்கு செல்லும் முதியோர்கள் தங்களுடன் நம்பிக்கைக்குரிய ஒருவரை உதவிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் அறிவுறுத்தியுள்ளார்.

வாலிபர் பலி

* வையம்பட்டியை அடுத்த சடையபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (30). இவர் தனது நண்பர் ராஜேந்திரனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சடையம்பட்டியில் இருந்து வையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் திரும்பிய போது, ஒரு கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திரன் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* துறையூரை அடுத்த செல்லிபாளையத்தை சேர்ந்த கலியபெருமாள் தனது மனைவியுடன், வீட்டை பூட்டிவிட்டு கோட்டப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் நேற்று மதியம் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்ற போது, ஒரு பெண் வீட்டிற்குள் இருந்தார். உடனே பொதுமக்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது, அவர் கள்ளச்சாவி போட்டு பூட்டை திறந்து திருட முயன்றது தெரியவந்தது. மேலும் அந்த பெண், தனது ஆடையில் ஏராளமான சாவிகளை மறைத்து வைத்திருந்தார். அந்த பெண்ணை துறையூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணல் கடத்தல்

* துவாக்குடி போலீசார் நேற்று அதிகாலை அய்யம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி டிரைவர் சிவசங்கரை (43) கைது செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளரான சூரியபிரகாசை (26) தேடிவருகிறார்கள். இதேபோல் அனுமதியின்றி 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்ததாக கிளியூரை சேர்ந்த ராமலிங்கம்(50), மனுநீதிச்சோழன்(32) ஆகியோரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

* உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம் ஏரியில் நேற்று காலை கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, ஒரு டிராக்டரில் சட்டவிரோதமாக மண் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த மதியழகனை(28) உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

கதண்டுகள் கடித்து 3 பேர் காயம்

* மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் செல்லும் சாலையில் மந்தியார் ஓடை பகுதியில் இருந்த ஒரு தென்னை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக சென்ற மூர்த்தி (35), அவரது மகள் சிந்துஜா (16) மற்றும் அதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (55) ஆகிய 3 பேரையும் கதண்டுகள் கடித்தன. இதில் காயம் அடைந்த 3 பேரும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் மருந்துகளை பயன்படுத்தி கதண்டுகளை அழித்தனர்.

* திருச்சி செந்தண்ணீர் புரத்தை சேர்ந்த சிவா (வயது 32), நேற்று முன்தினம் செந்தண்ணீர்புரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேசுவரன்(22), சிவாவின் சட்டைப்பையில் இருந்த செல்போனை திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து பொன்மலை போலீசில் சிவா ஒப்படைத்தார். போலீசார் விக்னேசுவரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை

* மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (38). சுற்றுலா வேன் டிரைவர். கடந்த 28-6-2017 அன்று இவர் பூனாம்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி சென்ற ஒரு கார் கோவிந்தன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த துறையூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரனை (35) கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு எஸ்.சோமசுந்தரம் விசாரித்தார். வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டி, விபத்து ஏற்படுத்தி கோவிந்தன் இறப்புக்கு காரணமாக இருந்த பிரபாகரனுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.

4 ேபர் மீது வழக்கு

* திருச்சி முதலியார் சத்திரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற ராஜா (வயது 39). இவர் மசாஜ் சென்டர் ஒன்றின் பங்குதாரர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (38). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்தின்போது 15 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக முத்துலட்சுமியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் ராஜா, மாமியார் பார்வதி(60), நாத்தனார் மகேஸ்வரி(45), அவருடைய கணவர் சுப்பிரமணி(50) ஆகியோருடன் முத்துலட்சுமி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் ராஜாவுக்கும் முத்துலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையே முத்துலட்சுமியின் நகைகளை தொழில் மேம்பாட்டுக்காக ராஜா ஏற்கனவே அடகு வைத்திருந்தார். அந்த நகைகளை திரும்ப கேட்டபோது, கொடுக்க மறுத்ததுடன் ராஜா மற்றும் மாமியார், நாத்தனார் மற்றும் நாத்தனாரின் கணவர் ஆகியோர் முத்துலட்சுமியை கொடுமைப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், ராஜா உள்ளிட்ட 4 பேர் மீதும் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story