மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ரூ.25 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
முத்தூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா முத்தூரில் வெள்ளகோவில் சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டப வளாகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.24.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ. தனியரசு முன்னிலையில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கி பேசினார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், மாவட்ட நிர்வாகத்தினையும், பொதுமக்களையும் இணைக்கும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் நடத்தப்பட்டு வரு கிறது. பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு வகையான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உடனே நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வருவாய்த்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், 33 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 500 மதிப்பில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகையினையும், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் 77 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 750 மதிப்பில் கல்வி உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை உள்பட 196 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 86 ஆயிரத்து 359-க்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
முன்னதாக வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, பொதுசுகாதாரம், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், காங்கேயம் தாசில்தார் புனிதவதி, உதவி திட்ட அலுவலர் கிரி, உதவி இயக்குனர் (நில அளவை) சசிக்குமார், வெள்ளகோவில் ஒன்றியக்குழு முன்னாள் துணை தலைவர் ஏ.எஸ்.ராமலிங்கம், நிலவள வங்கி தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், முத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜி.முத்துக்குமார், காமராஜ் கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் பி.ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story