காதலன் வீட்டு முன்பு 2-வது நாளாக குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா


காதலன் வீட்டு முன்பு 2-வது நாளாக குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 5:05 PM GMT)

திட்டச்சேரி அருகே காதலன் வீட்டு முன்பு மாற்றுத்திறனாளி பெண் நேற்று 2-வதுநாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் தீனா (வயது21). மாற்றுத்திறனாளி. இவரும் அதே பகுதி ஆண்டித் தோப்பு தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் அய்யப்பன் (24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதில் தீனா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தீனாவின் பெற்றோர், அய்யப்பனின் வீட்டுக்கு சென்று திருமணம் செய்து வைக்கும்படி முறையிட்டனர். ஆனால் தீனாவை திருமணம் செய்து கொள்ள அய்யப்பன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சூப்பிரண்டு அலுவலகத்தில் தீனாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஆண் குழந்தை பிறந்தது

ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் பேசி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி நாகை அரசு மருத்துவமனையில் தீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தீனா நேற்று குழந்தையுடன் காதலன் அய்யப்பன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தீனாவுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின்போது தான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், மாற்றுத்திறனாளி என்பதாலும் தன்னை அய்யப்பன் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக தீனா கூறினார். பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த அய்யப்பன் மற்றும் அவருடைய பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் வலியுறுத்தினார்கள்.

2-வதுநாளாக தர்ணா

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக இரவு வரை நீடித்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள அய்யப்பன் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story