பெண்ணாடம் அருகே, திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பெண்ணாடம் அருகே, திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Nov 2019 3:30 AM IST (Updated: 27 Nov 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே அரியராவியில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(வயது 60) என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி, கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, கண்ணில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடு, ஐம்பொன் சிலை ஆகியவற்றையும் காணவில்லை. பின்னர் இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது கோவிலுக்கு அருகே உள்ள வயல்வெளியில் உண்டியல் கிடந்தது. மேலும் அதன் அருகில் சில்லரை காசுகளும், ஐம்பொன் சிலையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை பெயர்த்து எடுத்த தோடு, அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, சிலையை எடுத்து கொண்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள வயல்வெளியில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். உண்டியல் மற்றும் ஐம்பொன் சிலையை மட்டும் அங்கேயே விட்டு சென்றிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story