100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம்


100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்களை வாக்களிக்க செய்வதற்கான மண்டல அளவில் ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று திருச்சியில் ஒரு ஓட்டலில் நடந்தது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். மாநில இணை தேர்தல் அதிகாரி மணிகண்டன், திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மற்றும் இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என 138 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோட்டாட்சியர்கள் சுரேந்திரன் (கொடைக்கானல்), ராஜகுமார் (குன்னூர்), பிரியா (மதுராந்தகம்) மற்றும் சென்னை உதவி கல்வி அலுவலர் முனியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அப்போது கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து சத்ய பிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம்

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவை, வேலூரில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு விட்டது. நாளை (அதாவது இன்று) மதுரையில் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்காளர்களை வாக்களிக்க செய்வதுதான் இந்த பயிற்சியின் நோக்கம். எனவே, பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்ைவ ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 5,796 உயர்நிலைப்பள்ளி, 7,809 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 13,605 பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது எப்படி? என்றும், 100 சதவீதம் வாக்களிக்க என்ன செய்ய வேண்டும்? என்றும் வழிகாட்டி புத்தகம் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்படும். அதற்காக மாநில, மாவட்டம், சட்டமன்ற தொகுதி வாரியாக மற்றும் பள்ளிகள் அளவிலும் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டு முடியும்போதும் மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் வீடியோ கேம் மூலமும், ஓவியம், கட்டுரை மற்றும் பாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை

மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் கட்டாயம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அதே வேளையில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திட வேண்டும். வாக்காளர்கள் தங்கள் உதவிக்காக தேர்தல் ஆணைய செயலியையும் பயன்படுத்தலாம். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியிலே வாக்காளர் பெயர் பதிவு செய்வது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் உத்தரவிட வேண்டும். ஆனாலும், அது பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story