வீடுபுகுந்து அக்காள்- தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலி பறிப்பு


வீடுபுகுந்து அக்காள்- தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:15 PM GMT (Updated: 27 Nov 2019 6:51 PM GMT)

ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து அக்காள்-தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவருடைய மனைவி அனுராதா. இவர்களுக்கு சிவரஞ்சினி(வயது 27), மோனிசா(22) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் அனுராதா மற்றும் அவர்களது மகள்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 3 டவுசர் கொள்ளையர்கள் சிவரஞ்சினி மற்றும் மோனிசாவிடம் அரிவாளை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் சிவரஞ்சினி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியையும், மோனிசா அணிந்திந்த 1½ பவுன் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பி ஒடினர்.

தீவிர தேடுதல் வேட்டை

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்காள்-தங்கை இருவரும் கூச்சலிட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் பொதுமக்கள் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பாப்பாநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

2 பேர் பிடிபட்டனர்

அப்போது அதிகாலை 5 மணியளவில் கண்ணுக்குடி கடைத்தெருவில் உள்ள டீக்கடை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற 3 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். இதில் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

சிவகங்கையை சேர்ந்தவர்கள்

பிடிபட்ட 2 பேரையும் போலீசார் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீடு புகுந்து சிவரஞ்சினி மற்றும் மோனிசாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் சிவகங்கை உள்ளிட்ட பல ஊர்களில் தங்கி இது போன்ற கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சிவகங்கைக்கு சென்று இவர்களின் கூட்டாளிகள் 3 பேரை பிடித்து பாப்பாநாட்டுக்கு கொண்டு வந்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஒடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் டவுசர் கொள்ளையர்களை பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீஸ் நண்பர்கள் பிரிவை சேர்ந்த அஜித் ஆகிய 3 பேருக்கும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.


Next Story