மடிக்கணினி வழங்கக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்


மடிக்கணினி வழங்கக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

மடிக்கணினி வழங்கக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி முன்னாள் மாணவர்கள் நூதன போராட்டம் நடை பெற்றது.

பூந்தமல்லி, 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் ஆவடியில் உள்ள விஜயந்தா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ- மாணவிகள் கண்ணில் கருப்பு துணியை கட்டி கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

ஆவடியில் உள்ள விஜயந்தா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 2018-19-ம் ஆண்டில் படித்த அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரசு சார்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. ஆனால் கணிதம், வணிகவியல், கணிப்பொறியியல் போன்ற துறைகளை சேர்ந்த 250 மாணவ- மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவர்கள் கேட்டபோது பள்ளி நிர்வாகம் எந்த பதிலும் சொல்லாமல் மாணவர்களுக்கு மடிக்கணினி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. பலமுறை மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட பின்னரும் அவர்கள் மடிக்கணினி வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் அணுகி விடுபட்ட எங்கள் அனைவருக்கும் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க முறையிட வந்ததாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டியிட்டவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.

Next Story