கடல் கொந்தளிப்பு, நீரோட்ட வேகத்தால் கரை ஒதுங்கும் கடல் புற்கள்


கடல் கொந்தளிப்பு, நீரோட்ட வேகத்தால் கரை ஒதுங்கும் கடல் புற்கள்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

கடல் கொந்தளிப்பு மற்றும் நீரோட்ட வேகத்தால் ஆற்றங்கரை கடற்கரையில் கடல் புற்கள் ஒதுங்கி வருகின்றன.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர கடல் புற்கள், கடல்பாசி, கடல் தாமரை, தாழை செடி உள்ளிட்ட பல இயற்கை தாவரங்களும் கடலில் இயற்கையாகவே வளர்ந்துள்ளன.

இந்தநிலையில் மண்டபம் முதல் ஆற்றங்கரை, பனைக்குளம் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் கடல் நீரோட்டமும் வேகமாக உள்ளது. கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் நீரோட்ட வேகத்தால் கடலில் இயற்கையாகவே வளர்ந்து நிற்கும் கடல் புற்கள், தாழை செடி, பாசி உள்ளிட்ட பல இயற்கை தாவரங்கள் பனைக்குளம் அருகே கடல் நீர், மழை காலங்களில் வெள்ளநீர் சங்கமிக்கும் முகத்துவாரம் அமைந்துள்ள ஆற்றங்கரை கடற்கரை பகுதி முழுவதும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கரை ஒதுங்கி கிடக்கின்றன.

ஒரு சில இடங்களில் மலைபோல் கடல் புல் கரை ஒதுங்கி குவிந்து கிடக்கிறது. கடலில் உள்ள கடல் புல்லை கடலில் வாழும் அரிய வகை உயிரினமான கடல் பசு மட்டுமே விரும்பி உண்ணுவதுடன் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் புல்லின் வளர்ச்சியும் குறைந்து வரும் நிலையில் தற்போது டன் கணக்கில் கடல் புற்கள் கடல் கொந்தளிப்பால் ஆற்றங்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடப்பது வனஉயிரின ஆர்வலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story