சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சாலைகளை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு இணைப்புச் சாலைக்கும் இடையே கட்டாயம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதா என அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும்.
அதேபோல் சந்திப்பு சாலைகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளும் விதமாக எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே வைக்க வேண்டும். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அவ்வப்போது சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், அண்ணாத்துரை, கலெக்டரின் நோ்முக உதவியாளா் ராமபிரதீபன், வட்டார போக்குவரத்து அலுவலா் கல்யாணகுமார் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story