விபத்தில் 3 பேர் பலியில் மேலும் சோகம்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் சாவு


விபத்தில் 3 பேர் பலியில் மேலும் சோகம்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர் அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தில், துக்கம் விசாரிக்க வந்த உறவினரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பனவடலிசத்திரம், 

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்குபனவடலிசத்திரம் ஊரைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு மகன் அய்யப்பன் (வயது 34). இவர் கேரளாவில் பழைய இரும்புக்கடை வியாபாரம் செய்து வந்தார். தனது சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டு கிரகப்பிரவேசம் தொடர்பாக அய்யப்பன், அவருடைய மனைவி செல்வி (30), அய்யப்பனின் தங்கை ஜோதி (32) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் பனவடலிசத்திரம் சென்று உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள், தெற்குபனவடலிசத்திரம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

செல்வியின் அக்காள் கணவர் வெள்ளத்துரை (55) கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். விபத்தில் செல்வி, அய்யப்பன், ஜோதி ஆகியோர் இறந்த தகவல் அறிந்து வெள்ளத்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள், ஒரு காரில் தெற்கு பனவடலிசத்திரத்துக்கு வந்து கொண்டு இருந்தனர். 3 பேர் இறந்த தகவல் கேட்டது முதலே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் வெள்ளத்துரை அழுது கொண்டே இருந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வந்தபோது திடீரென்று காரில் மயங்கி இருக்கையில் விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வெள்ளத்துரை இறந்து விட்டார்.

பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை 3 மணி அளவில் அய்யப்பன், செல்வி, ஜோதி ஆகியோரது உடல்கள் தெற்கு பனவடலிசத்திரம் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், துக்கம் விசாரிக்க வந்த வெள்ளத்துரை காலையில் இறந்துவிட்டதால் வெள்ளத்துரையை முதலில் அடக்கம் செய்தனர். அதன்பிறகு அய்யப்பன், செல்வி, ஜோதி ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் உயிரிழந்த வெள்ளத்துரைக்கு கொடுங்குத்தாய் (50) என்ற மனைவியும், மாரிமுத்து (29), மணிகண்டன் (27), பட்டுச்சாமி (25) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

விபத்தில் 3 பேர் இறந்த சம்பவத்தில் துக்கம் விசாரிக்க வந்த உறவினரும் அதிர்ச்சியில் இறந்தது அந்த பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story