பேரையூர் பகுதியில், வெங்காயத்தில் கருகல் நோய் தாக்கம் - விவசாயிகள் வேதனை
பேரையூர் அருகே வெங்காய பயிரில் கருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள சந்தையூர், எஸ்.பாறைப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கடந்த புரட்டாசி மாதத்தில் சுமார் 150 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். உழவு, பாத்தி கட்டுதல், விதை வெங்காயம், உரம், களையெடுப்பு என்று ஏக்கருக்கு சுமார் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்தனர்.
60 நாள் பயிர் வரை சின்ன வெங்காயம் நன்றாக வளர்ந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக செடிகளில் பழுப்பு நிறம் ஏற்பட்டு செடிகள் கருகி வருகிறது.
இதனால் வெங்காயம் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. மேலும் செடியில் நுனி கருகல் நோயும் ஏற்பட்டுள்ளது. ஒரு செடியில் தாக்கிய நோய் அருகில் உள்ள எல்லா செடிகளுக்கும் பரவி வருகிறது.
இந்த நோயால் வெங்காய அறுவடையில் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வருடமும் அதிகாலை பனியால் இப்பகுதிகளில் வெங்காயம் சாகுபடி பாதிப்பு அடைந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்த நோய் பரவாமல் இருக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து டி.கல்லுப்பட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெஸிமா பானு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “இந்த பகுதிகளில் வெங்காய பயிரில் நுனிகருகல் நோய் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. நோயின் ஆரம்ப கட்டம் இதுவாகும்.
அதிகாலையில் காணப்படும் கடும் பனிப்பொழிவின் காரணமாக வெங்காய பயிரின் வளர்ச்சி பாதிக்கிறது. இதற்கு டைத்தேன் எம்.45 மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது மாங்கோசெப் மருந்து 2.5 கிராம் என்ற அளவில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து இந்த நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.” என்றார்.
Related Tags :
Next Story