மன்னார் வளைகுடா பகுதியில், குருசடைதீவு பரப்பளவு அதிகரிப்பு; புதிய மணல் திட்டு உருவானது - வன உயிரின காப்பாளர் தகவல்


மன்னார் வளைகுடா பகுதியில், குருசடைதீவு பரப்பளவு அதிகரிப்பு; புதிய மணல் திட்டு உருவானது - வன உயிரின காப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

மன்னார் வளைகுடா பகுதியில் குருசடை தீவு பரப்பளவு அதிகரித்துள்ளது, புதிய மணல் திட்டு உருவாகி இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியான ராமேசுவரம் முதல் தூத்துக்குடி வரையிலான கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல்பசு,ஆமை உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் பவளப்பாறைகளும் அதிகஅளவில் உள்ளன. இந்த நிலையில் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே நடுக்கடலில் உள்ள குருசடைதீவு பகுதியை மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பிறகு அவர் கூறியதாவது:-

மன்னார் வளைகுடாவில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சில தீவுகள் கடல் அரிப்பால் பரப்பளவு குறைந்துள்ளது. கடல் அரிப்பை தடுப் பதற்காகவே அந்த தீவுகளில் சுமார் 6 ஆயிரம் செயற்கை பவளப்பாறைகள் இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளன.

கடல் அரிப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு தீவுகளும் பாதிக்கப்படவில்லை. பாம்பன் அருகே உள்ள குருசடை தீவின் பரப்பளவு அதிகமாகி உள்ளது. அதுபோல் மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலி மற்றும் மனோலிபட்டி தீவுகளின் இடையில் கடலில் புதிதாக மணல் திட்டும் ஒன்றும் உருவாகியுள்ளது.

இந்தியாவில் அந்தமான், குஜராத், லட்சத்தீவு மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தான் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றிலும் 117 வகையான பவளப்பாறைகள் உள்ளன. அனைத்து தீவுகளிலுமே பவளப்பாறைகள் பரவலாக உள்ளன. மன்னார் வளைகுடா கடலில் உள்ள இந்த பவளப்பாறைகள் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குருசடை தீவில் மேலும் பவளப்பாறைகள் வளர்ப்பிற்காக ரூ.3½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குருசடை தீவில் 500 சதுர மீட்டர் பரப்பளவில் பவளப்பாறைகள் வளர்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் உடனிருந்தார்.

Next Story