அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் 3-வது நாளாக போராட்டம், ஆட்சியாளர்களின் அநீதிக்கு தி.மு.க. துணைபோகாது - சிவா எம்.எல்.ஏ. பேச்சு
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதில் ஆட்சிக்கு தான் தி.மு.க. ஆதரவு எனவும், ஆட்சியாளர்களின் அநீதிக்கு துணை நிற்க மாட்டோம் எனவும் சிவா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்கள் (அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர்) தங்களை தினக்கூலி ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் சுதேசி மில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் 2-வது நாள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.
நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தத்துடன் உண்ணாவிரதம் சுதேசி மில் அருகே தொடர்ந்தது. சங்க தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று மாலை சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது:-
அரசுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது புதுவை அரசுக்கு அக்கறை இல்லை. தொழிலாளர்கள் போராட்டம் நீடித்தால் புதுவையின் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். புதுச்சேரியில் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள். பல ஊழியர்கள் பணி நிரந்தரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆட்சிக்குத்தான் தி.மு.க. ஆதரவு அளித்து வருகிறது. ஆட்சியாளர்கள் அநீதிக்கு தி.மு.க. துணை போகாது..
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story