நண்பரின் கொலைக்கு பழிவாங்க, இறுதிச்சடங்கில் சபதம் ஏற்று அன்புரஜினியை கொலை செய்தோம் - ரவுடி சோழன் வாக்குமூலம்
நண்பரின் கொலைக்கு பழிவாங்க அவரது இறுதிச்சடங்கில் சபதம் ஏற்று அன்புரஜினியை கொலை செய்தோம் என்று ரவுடி சோழன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பத்தை சேர்ந்தவர் அன்புரஜினி (வயது 35). பிரபல ரவுடியான இவர் கடந்த 10-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நைனார்மண்டபத்தை சேர்ந்த ஸ்ரீராம் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காலாப்பட்டு சிறையில் உள்ள ரவுடி சோழன் தூண்டுதலின் பேரில் அன்புரஜினியை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ரவுடி சோழனை கைது செய்தனர்.
பின்னர் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கோர்ட்டில் மனு செய்து ரவுடி சோழனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
கூனிமேடு பகுதியை சேர்ந்த வினோத் எனது நெருங்கிய நண்பர். நான் சொல்லும் பணிகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றி தருவார். அவர் கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அவரது இறுதிச்சடங்கில் நானும் எனது நண்பர்களும் கலந்து கொண்டோம். அப்போது வினோத்தை கொலை செய்தவர்களை பழிவாங்குவோம் என்று சபதம் ஏற்றுக்கொண்டோம்.
கொலை நடந்த போது அவரை கொலை செய்தது யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவரது கொலை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர். அவர்களை ஜாமீனில் எடுக்க அன்புரஜினி உதவி செய்தது தெரியவந்தது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். அவரை கொலை செய்ய பல ரவுடிகளிடம் நேரில் பேசினேன். ஆனால் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே சந்திரசேகர் கொலையில் கைது செய்யப்பட்டு நான் சிறைக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு எனது தம்பி பாண்டியன் மூலம் ஸ்ரீராம் உள்பட பலரை தேர்வு செய்தேன். அவர்களிடம் அன்புரஜினியை கொலை செய்யும்படி ஜெயிலில் இருந்தபடியே உத்தரவிட்டேன். அவர்கள் 2 மாதங்களாக அன்பு ரஜினியை பின்தொடர்ந்து சென்று சந்தர்ப்பம் கிடைத்தபோது அவரை கொலை செய்துவிட்டனர்.
இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்தார்.
2 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை ரவுடி சோழனை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story