மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் - அஜித்பவார் சொல்கிறார்
சிவசேனா தலைமையில் அமையும் அரசின் மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 23-ந் தேதி எதிர்பாராத திருப்பமாக அமைந்த தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்து, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவார் நேற்றுமுன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இரவு சரத்பவாரை தென்மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.
மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் நேற்று நரிமன்பாயிண்டில் உள்ள ஒய்.பி.சவான் அரங்கத்தில் நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அஜித்பவார் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், சட்டசபை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்ட அஜித்பவாரிடம் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு அஜித்பவார் பதில் அளித்து கூறிய தாவது:-
இப்போது நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. சரியான நேரத்தில் பேசுவேன்.
நான் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன். குழப்பத்தை உருவாக்க எந்த காரணமும் இல்லை. சிவசேனா தலைமையில் அமையும் புதிய அரசின் மந்திரி சபையில் என்னை சேர்ப்பது பற்றி உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story