ஓசூரில் 3,683 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்


ஓசூரில் 3,683 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:15 AM IST (Updated: 28 Nov 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 3,683 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

ஓசூர், 

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வரவேற்று பேசினார். 

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 3,683 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, விபத்து நிவாரணம், ரே‌‌ஷன் கார்டு, விதவை சான்று, தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அவர் பேசுகையில், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 30 ஆயிரத்து 273 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் தகுதிவாய்ந்த 13 ஆயிரத்து 925 மனுக்கள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய 4 தாலுகாவிலும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.

இதில் முன்னாள் அமைச்சர் பாலகிரு‌‌ஷ்ணரெட்டி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்.பி. பெருமாள், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், கூட்டுறவு வங்கித்தலைவர் நடராஜன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், ஓசூர் நகர செயலாளர் நாராயணன், துணை செயலாளர் மதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அரப் ஜான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வாசுதேவன், சரஸ்வதி, முரளி, மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

Next Story