ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் காரை கத்தியுடன் வழிமறித்த இளைஞரால் பரபரப்பு
ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை கத்தியுடன் வழிமறித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. காலையில் திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மதியம் 1.15 மணியளவில் ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழா நடந்தது.
இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தை தொடங்கி வைத்து 8 ஆயிரத்து 688 பயனாளிகளுக்கு ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவிற்கு பின்னர் மாலை 3.15 மணியளவில் அங்கிருந்து முதல்-அமைச்சர் காரில் புறப்பட்டார். அவரின் முன்னால் பாதுகாப்பு வாகனம் சென்றது. அதன்பின்னால் முதல்-அமைச்சரின் கார் வந்தது. அப்போது திடீரென ஒரு வாலிபர் முதல்-அமைச்சர் காரை வழிமறித்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபர் எனக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அதனை தீர்க்காமல் சென்றால் இறந்து விடுவேன் என்று கூறி திடீரென பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டல் விடுத்தார். அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த பாதுகாப்பு போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்த கத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 30) என்பதும், அப்பகுதியில் உள்ள ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் கடன் கொடுத்தவர் மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். அவரை பார்த்து மனு அளிக்க முடியாததால் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் சுதாகரை ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story