கிராமப்புறங்களில் செயல்படும், கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் வருவதில்லை - விவசாயிகள் புகார்
கிராமப்புறங்களில் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் முறையாக வருவதில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தொடர்ந்து விவசாயிகள் தங்களின் குறைகள் குறித்து கலெக்டரிடம் விவாதம் நடத்தினர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் முறையாக வருவதில்லை. இதனால் ஆடு, மாடுகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
மேலும் கால்நடை மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளும் போதுமான அளவு இருப்பு வைப்பதில்லை என்று கலெக்டரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகளின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் மாவட்ட பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய சாகுபடி பணிக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை காபி பழங்கள் பறிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அந்த பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்படுவார்கள் என்றார். அதையடுத்து பயிர் சாகுபடியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம், விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி அவர்களே விற்பனை செய்யும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய உலர்கூடம் அமைக்க வேளாண் துறை மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சராசரியாக 771 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை 556.97 மில்லிமீட்டர் வரை தான் மழை பெய்துள்ளது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story