புதிய மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் திருப்பத்தூர் மக்களின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது


புதிய மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் திருப்பத்தூர் மக்களின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 28 Nov 2019 11:00 PM GMT (Updated: 28 Nov 2019 5:04 PM GMT)

திருப்பத்தூர் புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் திருப்பத்தூர் மக்களின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திருப்பத்தூர், 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா நேற்று டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் 35-வது மாவட்டமாக உருவாகியிருக்கிறது. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களின் கனவு நனவாகியிருக்கிறது. அரசு திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் 12 புதிய மாவட்டங்களை உருவாக்கினார்கள். அதே நோக்கத்தோடு நமது முதல்-அமைச்சர் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி ஆணையிட்டார். கடந்த 22-ந் தேதி தென்காசி மாவட்டமும், 26-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு, இன்று (நேற்று) 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கோ, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கோ செல்ல வேண்டுமானால் 91 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூருக்கு தான் செல்ல வேண்டும். அந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து திருப்பத்தூர் மக்களின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பழம்பெருமை

திருப்பத்தூர் ஆங்கிலேயர் காலத்திலேயே மாவட்டமாக இருந்துள்ளது. 1988-ம் ஆண்டு வேலூரை பிரித்து திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. 1989-ல் தி.மு.க. ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் உருவாக்கப்பட்டது. திருப்பத்தூர் கிடப்பில் போடப்பட்டது. தொடர் போராட்டம், கோரிக்கைகள் காரணமாக 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்படும் என ஜெயலலிதா உறுதியளித்தார். அவருடைய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

1790-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருப்பத்தூரில் முதல் கலெக்டர் அலுவலகம் உருவாக்கப்பட்டது. தற்போது 225 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த பழம்பெருமையை ஜெயலலிதா அரசு மீட்டு தந்துள்ளது. புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதன் மூலம் தொழில்வளம் முன்னேறி, திருப்பத்தூர் மாவட்டம் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேறி இருக்கிறது. இயற்கையின் ஆதரவோடு அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டிருப்பது, இந்த விழாவின் சிறப்பாகும்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2011-ம் ஆண்டு திருப்பத்தூரில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் அரக்கோணம் வரை விரிவுப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நகரம், பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுறங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அரசு திட்டங்களை மக்கள் எளிதில் பெற புதிய மாவட்டத்தை தாய் உள்ளத்தோடு தந்துள்ளார்கள். எந்த மக்களும் வருத்தப்படாத வகையில் 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு ஒரு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரலாற்றிலேயே ஒரு மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது இங்கு தான். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், வாணியம்பாடி பகுதியில் வீடு இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 528 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் தந்துள்ளார். 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ரூ.9 கோடியில் ஆண்டியப்பனூர் சுற்றுலா தலமாக்குதல், பாலாற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் பாலம் கட்டுவதற்கான ஆணை போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். மேலும் சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்குகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Next Story