ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம்: கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு


ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம்: கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு
x
தினத்தந்தி 29 Nov 2019 4:45 AM IST (Updated: 28 Nov 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அளித்துள்ளார். மேலும், விடுதலை செய்யக்கோரி ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டு அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

மனைவி நளினியை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து இருவரும் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று முதல் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். நேற்று காலை முதல் நளினி உணவு உண்ணாமல் விரதத்தை கடைபிடித்து வருகிறார்.

இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவியது.

இந்த தகவலை உறுதிபடுத்திக் கொள்ள சிறைத்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஜெயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகளிடம் நளினி மனு அளித்துள்ளார். ஆனால் அதில் உள்ள தகவலை தெரிவிக்க மாட்டோம். தெரிவிக்க கூடாது என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றனர்.

கருணைக்கொலை செய்யக்கோரி தான் அவர் மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நளினியின் வக்கீல் புகழேந்தி ஜெயிலுக்கு வந்து நளினியை சந்தித்து பேசிய பின்னர் தான் முழுமையான தகவல் வெளிவரும்.

இந்த மனு குறித்து, நளினியின் வக்கீல் புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த தகவல் எனக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையா? என தெரியவில்லை. இதுபற்றி ஜெயில் அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஓரிரு நாட்களில் நளினியை சந்திக்க உள்ளேன் என்றார்.

Next Story