திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 860 ஸ்கூட்டர் - டிசம்பர் 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்துடன் 860 ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல்,
வேலைக்கு செல்லும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 345 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 2019-20-ம் நிதியாண்டில் வழங்கப்படும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இந்த நிதியாண்டில் மட்டும் 860 ஸ்கூட்டர்கள் மானியத்துடன் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் வசிக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள், சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இந்த நிதியாண்டில் 860 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாய அமைப்பாளர்களிடம் இருந்து பெண்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பின்னர் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story