ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி- 29பேர் கைது
ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி 29 பேரை கைது செய்தனர். மேலும், டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று மதுபிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி ஜெயகோபால் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அங்கு குடிமகன்கள் மது வாங்கி சாலையோரமாக உட்கார்ந்து மது அருந்தி வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்தநிலையில் அதே பகுதியில் பழைய டாஸ்மாக் கடை இருந்த கட்டிடத்துக்கு சிறிது தூரத்தில் புதிய கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த புதிய கடை நேற்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது.
புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை எதிர்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இருந்தது. அப்போது பலர் மது பாட்டில்களை வாங்கி வந்து வீடுகளுக்கு முன்பு நின்றுகொண்டு குடித்தனர். இதுபற்றி அவர்களிடம் கேட்டால், நாங்கள் என்ன வீடுகளுக்கு உள்ளே வந்தா மது குடிக்கிறோம் என்று கேட்டார்கள். மேலும், பகல் நேரத்திலேயே பெண்களால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக காணப்பட்டது. பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு போராடியதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக நிம்மதியாக இருந்து வந்ேதாம். இந்தநிலையில் மீண்டும் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. அதுவும் பொதுக்கழிப்பறைக்கு எதிரே கடை திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் குடிமகன்கள் பொதுக்கழிப்பறையை பாராக மாற்றி விடுவார்கள். மேலும், பெண்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.
இதற்கிடையே டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட தகவல் பரவியதும் மதுபிரியர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் கடைக்கு முன்பு நின்று கொண்டு டாஸ்மாக் கடையை மூட விடமாட்டோம் என்று கூறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், கடையை மூடக்கூடாது என்றும் ஒரே இடத்தில் போராட்டம் நடந்ததால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மதுபிரியர்கள் செயல்பட்டனர். அவர்கள் கடையை மூட பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்று கடையின் முன்பு திரண்டு நின்றார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடைக்கு அருகிலேயே வீதியில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், “உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களும் அங்கேயே அமர்ந்து மனுவை எழுதி கையெழுத்திட்டு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூவிடம் கொடுத்தனர். அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக கடையை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணிநேரத்தை கடந்து பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்தது. அதேசமயம் மதுபிரியர்களும் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றிருந்தனர். இருதரப்பினரும் மாறி, மாறி கோஷமிட்டதால் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் டாஸ்மாக் கடையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று பொதுமக்களும் உறுதியுடன் இருந்தனர்.
அதன்பின்னர் பொதுமக்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது ஒருசிலர் கைதாக மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் 11 பெண்கள் உள்பட மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story