விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: சடையநேரி கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
சடையநேரி கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது பெற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பாலில் கலப்படம் இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் கொடுக்கும் பாலில் எந்த கலப்படமும் இல்லை. இதனை உரிய ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினர்.
சாத்தான்குளம் கலுங்கு விளையை சேர்ந்த விவசாயிகள், கூட்ட அரங்கில் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியால் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கல்குவாரியை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சில விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து வழங்க வேண்டும். கோவில்பட்டி அருகே உள்ள கொடுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு கிடைப்பது இல்லை. சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் சடையநேரி குளத்துக்கு 176 கனஅடியும், புத்தன்தருவைகுளத்துக்கு 324 கனஅடியும், உடன்குடிக்கு 22 கனஅடி தண்ணீரும் பகிர்ந்து அளித்தால் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பும்.
ஸ்ரீவைகுண்டம் தென்காலில் புதிய குளங்கள் வெட்ட வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் மணிமுத்தாறு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கயத்தாறில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள எட்டயபுரம் ஈராச்சி கண்மாயை பொதுப்பணித்துறையில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் சராசரியாக 429 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். தற்போது 440 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு தாமிரபரணி, கோரம்பள்ளம், வைப்பாறு வடிநில கோட்டங்களில் உள்ள 40 குளங்கள் குடிமராமத்து பணி மேற்கொள்ள தேர்வு செய்து உள்ளோம். இதில் வேறு ஏதேனும் குளங்கள் சேர்க்க வேண்டுமென்றால், விவசாயிகள் தெரிவிக்கலாம். அதே போன்று பல்வேறு தடுப்பணைகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து குளங்களில் தண்ணீர் வற்றிய உடன் மராமத்து பணிகள் தொடங்கப்படும்.
தற்போது சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் முறையாக பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளம், புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும். இந்த கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 34 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்களுக்கு அரசு சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை கண்காணித்து வருகிறோம். 2017-18-ம் ஆண்டில் பயிர் காப்பீடு தொகையாக 80 ஆயிரத்து 993 விவசாயிகளுக்கு ரூ.82 கோடியே 38 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. 2018-19-ம் ஆண்டு ரூ.2 கோடியே 14 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.33 கோடி இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.31.5 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சில விவசாயிகள் சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாததாலும், தவறான தகவல்கள் இருப்பதாலும் இழப்பீட்டு தொகை வினியோகிக்க முடியவில்லை. இதில் யாரேனும் விடுபட்டு இருந்தால், மனு கொடுத்தால் அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் விஜயா, சுகுமார், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சரசுவதி, வேளாண் அலுவலர் ராமலட்சுமி, அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story