தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில், சேதமான தடுப்பு சுவரை சீரமைக்கும் பணி தொடங்கியது
கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சேதமான தடுப்பு சுவரை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளிப்பாக இருந்து வருவதுடன், கடல் நீரோட்டமும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 26-ந் தேதி அன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை வடக்கு கடல் பகுதியில் தடுப்பு சுவரை சுற்றிலும் குவிக்கப் பட்டிருந்த பெரிய, பெரிய கற்கள் அனைத்தும் கடலில் விழுந்து தடுப்பு சுவர் சேதமானது.
அதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக அரிச்சல்முனை வரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷ்கோடி வரும் அனைத்து வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் கம்பிப்பாடு வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பால் சேதமான
தடுப்பு சுவரை சீரமைக்க லாரிகள் மூலம் கற்கள் கொண்டு வரப்பட்டு அரிச்சல்முனை பகுதியில் கொட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தடுப்பு சுவரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாபயணிகள் அரிச்சல்முனை வரை செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கம்பிப்பாடு பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து அரிச்சல்முனை வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர்.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பால் சேதமான தடுப்பு சுவரை சுற்றிலும் பெரிய பெரிய கற்கள் கொட்டப்பட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தற்காலிக சீரமைப்பு பணி இன்னும் 3 தினங்களுக்குள் முடிந்து விடும்.
மழை சீசன் முடிந்து கடல் அலைகளின் வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அரிச்சல்முனையில் தடுப்பு சுவரை சுற்றிலும் பெரிய பெரிய கற்களை கொட்டி சுமார் ரூ.2 கோடி நிதியில் புதிதாக தடுப்பு சுவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபோன்று கட்டப்படும் தடுப்பு சுவரால் நிரந்தரமாக அரிச்சல்முனை பகுதியில் தடுப்பு சுவர் மற்றும் சாலைக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story