ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூ.8 கோடியில் கிராம புறச்சாலை சீரமைப்பு பணி - கலெக்டர் தகவல்


ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூ.8 கோடியில் கிராம புறச்சாலை சீரமைப்பு பணி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2019 3:45 AM IST (Updated: 29 Nov 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 192 கிராம புறச்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

கல்லல்,

கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராமப்புற சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் ஜெயகாந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் ஜெயகாந்தன், நடராஜபுரம் ஊராட்சியில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணியை பார்வையிட்டு அதை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2018-2019-ம் ஆண்டிற்கான கிராமப்புறச் சாலைகள் சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசு ரூ.8.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அனுமதி பெற்ற 192 கிராமப்புற சாலைகள் சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிகள் முழுமையாக நடைபெற்று தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

பொதுவாக இந்த பணியானது கிராமப்புற மக்களின் தேவைக்கேற்ப தார்ச்சாலைகள் விரிவுபடுத்துதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அரசு அனுமதி பெற்று ஒவ்வொரு ஆண்டும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொதுமக்களின் தேவைக்கேற்ப இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராவல் சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்றும் திட்டத்திலும் பணிகள் முடிக்கப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு புதிய தார்ச்சாலைகளாகவும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வரும் நிதியாண்டில் பணி மேற்கொள்ளாத சாலைகளை புதுப்பிக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் வசதிக்கேற்ப சாலை வசதிகளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முருகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story